போரிடும் பணியை பெண்களுக்கு கொடுக்க முடியாது; இந்திய ராணுவ தளபதியின் விளக்கத்தால் டுவிட்டரில் கொந்தளிப்பு

போரிடும் பணியை பெண்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறிய இந்திய ராணுவ தளபதி அதற்காக கொடுத்த விளக்கம் டுவிட்டரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரிடும் பணியை பெண்களுக்கு கொடுக்க முடியாது; இந்திய ராணுவ தளபதியின் விளக்கத்தால் டுவிட்டரில் கொந்தளிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள் பிரிவில் பெண்கள் நியமிக்கப்படுவதில்லை. சண்டையிடுவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு, பெண்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படும் வழக்கம் இருந்துவருகிறது. இந்தியாவில் மருத்துவம், நீதிமன்றப் பணிகள், பொறியியல் பணிகளில் மட்டும் நியமிக்கப்பட்டுவந்தனர். கடந்த அண்டு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், ராணுவத்தில் சண்டையிடும் வீரர்களாக பெண்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள், அதற்கான பணி நடைபெறும் என்று தெரிவித்தார். இதனை பெண் வீரர்கள் வரவேற்றார்கள். பலரும் பாராட்டினார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய பிபின் ராவத்திடம், ராணுவத்தில் சண்டையிடும் பணியில் பெண்கள் நியமனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக அவர் கொடுத்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பெண் கமாண்டர்களை ஏற்பது கிடையாது. எனவே சண்டையிடும் பணிக்கு பெண்கள் தயாரில்லை. போரில் பெண்கள் உயிரிழக்க நேரிடும். இதனை எதிர்க்கொள்ள இந்திய குடும்பங்கள் தயாராக இல்லை. பெண் வீரர்களின் உடல்கள் போர்முனையிலிருந்து வருவதையும் பார்க்க அவர்கள் தயாராக இல்லை.

ஒரு பெண்ணின் முதன்மை பொறுப்பு குழந்தைகளை பார்த்துக்கொள்வது. பெண்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பை ராணுவம் வழங்க முடியாது. விடுப்பு மறுக்கப்பட்டாலும் பெரும் கொந்தளிப்பு நேரிடும். போர் முனையில் 100 ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பெண்கள் பணியாற்ற நேரிடும். பின்னர் உடைமாற்றும் போது எட்டிபார்த்தார்கள் என்ற புகாரெல்லாம் வரும். யாரோ எட்டிபார்க்கிறார்கள் என்பார்கள், நாங்கள் அவருக்கு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டியது இருக்கும் என்று கூறியுள்ளார். அவருடைய இப்பேச்சு டுவிட்டரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் வீரர்களை எட்டிபார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவார்கள் என்பதற்காக பெண்களுக்கு சண்டையிடும் பணியை கொடுக்க முடியாது என பிபின் ராவத் கூறியுள்ளார். இப்போது இந்தியாவிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் என டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இந்திய ராணுவ வீரர்களை சிறுமைப்படுத்திவிட்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com