

திருவனந்தபுரம்,
தமிழ்நாடு-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவனந்தபுரம் சென்றிருந்தார். அங்கு அவர், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு கேரளாவை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த நதிநீர் மீட்புக்குழுவினருடன் தொடர்புடைய இந்த அமைப்பினர், இந்த பேச்சுவார்த்தைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கேரள அரசுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் சந்திப்பு நடந்த ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலையில் குறிப்பிட்ட அந்த அமைப்பை சேர்ந்த சுமார் 25 பேர் பேச்சுவார்த்தை நடைபெறும் ஓட்டலுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்து தடுப்புக்காவலில் சிறையில் அடைத்தனர்.