

புதுடெல்லி,
புதுடெல்லியில் நடந்த இந்திய மற்றும் பிரேசில் நாடுகளின் வர்த்தக மன்றத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, ரெயில்வே துறை ஆகியவற்றுக்கான மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, ரெயில்வே துறையை மின்மயம் ஆக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் வருகிற 2024-ம் ஆண்டிற்குள் ரெயில்வே துறை 100 சதவீதம் அளவிற்கு மின்மயம் ஆக்கப்படும்.
இதனால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்க கூடிய மிக பெரிய முதல் ரெயில்வே துறையாக இந்திய ரெயில்வே இருக்கும். இதேபோன்று வரும் 2030-ம் ஆண்டிற்குள், ரெயில்வே துறை முழுவதும், பருவநிலையில் பாதிப்பு அல்லது சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் கழிவு பொருட்களை வெளியேற்றாத வகையில் உருவாக்க நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்.
பிரேசில் நாட்டுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.