வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
Published on

புதுடெல்லி,

சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வாச்சாத்தி கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அந்த அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கிராமத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு இறுதியாக தர்மபுரி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேரில், 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், மீதமுள்ளவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட கோர்ட்டு 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் கடந்த மாதம் 29-ந் தேதி தீர்ப்பு கூறினார். மேல்முறையீடு வழக்குகளை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.

சம்பவம் நடந்த காலத்தில் தர்மபுரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட வன அதிகாரியாக இருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க கோரியும், ஓய்வுபெற்ற இந்திய வனப்பணி அதிகாரி எல்.நாதன் உள்ளிட்ட 30 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் முன்னாள் அதிகாரி எல்.நாதனின் மனுவை நீதிபதி கே.வி.விஸ்வநாதன் நாளை(திங்கட்கிழமை) விசாரிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com