தற்காப்புக்காக ஒரு வாலிபரை சுட்டுக்கொன்றோம் - டி.ஜி.பி. கருத்துக்கு மாறாக மாவட்ட போலீஸ் ஒப்புதல்

உத்தரபிரதேச வன்முறையின்போது, தற்காப்புக்காக ஒரு வாலிபரை சுட்டுக்கொன்றோம் என்று மாவட்ட போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தற்காப்புக்காக ஒரு வாலிபரை சுட்டுக்கொன்றோம் - டி.ஜி.பி. கருத்துக்கு மாறாக மாவட்ட போலீஸ் ஒப்புதல்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. கடந்த 20-ந்தேதி, பிஜ்னோரில் நாதார் பகுதியில் ஒரு வாலிபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். அவர் பெயர் சுலைமான் (வயது 22). போலீஸ் துப்பாக்கி சூட்டில்தான் அவர் இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஆனால், உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட பலியாகவில்லை, கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில்தான், தவறுதலாக பலர் உயிரிழந்தனர் என்று மறுப்பு தெரிவித்தார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 62 பேர் உள்பட மொத்தம் 288 போலீசார் காயமடைந்ததாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்தது. 700 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், டி.ஜி.பி. கருத்துக்கு மாறாக பிஜ்னோர் மாவட்ட போலீசார், தங்களது துப்பாக்கி சூட்டில் சுலைமான் பலியானதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (ஊரகம்) விஷ்வஜித் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-

கடந்த 20-ந்தேதி வெள்ளிக்கிழமை, ஒரு வன்முறை கும்பல், போலீஸ் நிலையத்தை தாக்கியது. சப்-இன்ஸ்பெக்டர் ஆசிஷ் தோமரின் துப்பாக்கியை பறித்தது. ஒரு போலீஸ்காரர், அதை திரும்பப் பெற முயன்றபோது, அவரை சுட்டது. தற்காப்புக்காக போலீஸ்காரர் திருப்பிச் சுட்டபோது, கலவரக்காரர்களில் ஒருவரான சுலைமான் குண்டு பாய்ந்து பலியானார். அதுபோல், கலவர கும்பல் சுட்டதில் அனிஸ் என்பவர் பலியானார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், சுலைமான், சிவில் சர்வீசஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், அவருக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கலவரக்காரர்கள், குழந்தைகளை முன்வரிசையில் நிறுத்தி கல் எறியவும், கோஷமிடவும் செய்ததாக பிஜ்னோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் தியாகி குற்றம் சாட்டினார். 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com