பீகாரில் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என ராகுல் காந்தி கூறினார்.
பாட்னா,
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் புர்னியா மாவட்டத்தில் இன்று பைக் பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறது. பிகாரில் இது நடக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனாலும் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பீகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி 8-வது நாளை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.






