

புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர், பேரறிவாளன் (வயது 45).
இவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் முன்னிலையில் கடந்த மாதம் 14ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்த புலனாய்வை சி.பி.ஐ. இன்னும் முடிக்கவில்லை. மனுதாரருக்கு எதிரான ஒரே சாட்சி வி.தியாகராஜன் என்ற சி.பி.ஐ. அதிகாரி, அவரிடம் பதிவு செய்ததாக கூறப்படும் வாக்குமூலம் மட்டுமே. ஆனால் 2013ம் ஆண்டில் அந்த அதிகாரி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் இருந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஏதும் அறியாதவராக பேரறிவாளன் இருந்தார் என்று கூறியிருக்கிறார். எனவே, இந்த கொலை வழக்கில் வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் பற்றிய புலனாய்வு தொடர்பாக சி.பி.ஐ.யின் பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை அல்லது வழக்கை முடித்து வைக்கும் வரை மனுதாரரின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரேகா பாண்டே, மத்திய அரசின் பதில் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைக்காமல், நடத்தினர்.
பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர், இந்த வழக்கில் மத்திய அரசுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரி இருந்தாலும் மத்திய அரசையும் ஒரு தரப்பாக ஏற்று விசாரிக்க வேண்டும். மேலும் ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை பெல்ட் வெடிகுண்டு விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. எனவே அந்த விசாரணை முடியும் வரை பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள், விசாரணை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்று இப்போது தெரியாது. பல ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க முடியுமா? தற்போது ஏற்பட்டு உள்ள சூழ்நிலையில் ராஜீவ் கொலை தொடர்பான மூல வழக்கை ஏன் மறுசீராய்வு செய்யக்கூடாது? அதேபோன்று இந்த மூல வழக்கின் மீது மறுவிசாரணை நடத்தவும் முகாந்திரம் இருக்கிறது போலத் தோன்றுகிறது. இதன் மூலம் ஒருவேளை நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது இல்லையா?என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, நீதிபதிகள், சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அளித்த பிரமாண பத்திரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படுகிறது என்றும் உத்தரவிட்டனர்.
அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 24ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தவிர, சி.பி.ஐ. நியமித்துள்ள சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமை கடந்த ஆகஸ்டு 22ந் தேதியன்று தாக்கல் செய்த அறிக்கையை பேரறிவாளன் தரப்பு வக்கீல்கள் பார்வையிடலாம் என்றும் அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.