

தலைமை நீதிபதி பேச்சு
சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளுக்கு, டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. பெண் வக்கீல்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் அனைத்து சட்ட கல்லூரிகளிலும், பெண்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நான் பலமாக பரிந்துரைக்கிறேன். ஆதரிக்கிறேன். காரல் மார்க்ஸ், உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நீங்கள் இழப்பதற்கு உங்கள் சங்கிலியைத்தவிர ஒன்றும் இல்லை என்று கூறி இருக்கிறார். நான் அதை மாற்றிச்சொல்வேன்.உலகப்பெண்களே ஒன்றுசேருங்கள். நீங்கள் இழப்பதற்கு உங்கள் சங்கிலியைத்தவிர ஒன்றும் இல்லை.
ஓங்கி குரல் கொடுங்கள்
நீங்கள் எல்லோரும் சிரிக்கிறீர்கள். ஆமாம். நீங்கள் அழுவதை நான் விரும்பவில்லை. நீதித்துறையில் எங்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்று நீங்கள் ஓங்கி குரல் கொடுங்கள். இது சாதாரண விஷயம் இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டு கால அடக்குமுறையின் பிரச்சினை ஆகும்.இதுதான் பெண்களுக்கு நீதித்துறையில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டிய சரியான தருணம் ஆகும்.உங்களுக்கு இதற்கான உரிமை உள்ளது. இது உங்கள் உரிமை. இது கருணையினால் பெறப்பட வேண்டியது அல்ல. சில விஷயங்கள் தாமதமாக உணரப்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது.இந்த குறிக்கோள் நிறைவேறும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
சங்கடமான சூழல்
50 சதவீத இடஒதுக்கீடு பெறுவது கடினம், பெண்களுக்கு பல சிரமங்கள் உள்ளன என்று மக்கள் சொல்லலாம். ஆனால் இது சரியல்ல.உள்கட்டமைப்பு வசதியின்மை, கூட்டம் கூடுகிற கோர்ட்டு அரங்கங்கள், போதுமான கழிவறையின்மை, போதுமான குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இன்மை, குறைவான உட்காரும் இடங்கள் என பல விதத்திலும் சங்கடமான சூழல் உள்ளது.எனவே நீதித்துறை உள்கட்டமைப்பு கழகம் என்ற ஒன்றை நிறுவ வேண்டும். இது இப்போது காலத்தின் கட்டாயம்.நாட்டில் உள்ள 6 ஆயிரம் கோர்ட்டுகளில் 22 சதவீதம் கோர்ட்டுகளில் பெண்களுக்கென்று தனியாக கழிவறை இல்லை. இதனால் பெண் நீதிபதிகளே பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுதான் கள நிலைமை. இதை நாம் சமாளிக்க வேண்டும். எனவே நிர்வாகம் சரி செய்வதற்கு இந்த பிரச்சினைகளை முன்மொழிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.