காரைக்கால் பணிமனையில் முடங்கிய பி.ஆர்.டி.சி. பஸ்கள்

காரைக்கால் பணிமனையில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் முடங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
காரைக்கால் பணிமனையில் முடங்கிய பி.ஆர்.டி.சி. பஸ்கள்
Published on

காரைக்கால்

காரைக்கால் பணிமனையில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் முடங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பெண்களுக்கு பிங்க் பஸ்

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைதூர பஸ்களும், கிராமப்புறங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக காரைக்கால் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 30 பஸ்கள் உள்ளன. புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, அண்மையில் பல்வேறு பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயக்கப்படும். குறிப்பாக பெண்களுக்கு என பிங்க் நிற பஸ்கள் இயக்கப்படும் என்று அறித்தார்.

13 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன

அவை வருவதற்குள் நாடு முழுவதும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக கூறி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும் பொதுத்துறை வாகனங்கள் போக்குவரத்தை நிறுத்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதனை ஏற்று புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலிருந்து 15 ஆண்டுகளை கடந்து இயக்கப்பட்ட 22 பஸ்களின் இயக்கத்தை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் நிறுத்தியுள்ளது. புதுச்சேரியில் 15 பஸ்களும், காரைக்காலில் 4 பஸ்களும், மாகியில் 3 பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.

காரைக்காலில் மொத்தமுள்ள 30 பஸ்களில் 4 போக, மீதி 26 பஸ்களில் இயக்கப்பட்டு வந்தன. அதிலும் 13 பஸ்கள் பல்வேறு காரணங்களால் பழுதாகி, காரைக்கால் போக்குவரத்து பணிமனையில் முடங்கி கிடக்கிறது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் தற்போது வெறும் 13 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் இயக்கப்படுமா?

குறிப்பாக, சென்னை, கோவை, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திரு-பட்டினம், பூவம், அம்பகரத்தூர், திருநள்ளாறு, சங்கரன்பந்தல், விழிதியூர் உள்ளிட்ட ஏராளமான வழித்தடங்களில் இயக்கப்பட்ட பி.ஆர்.டி.சி. பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெரியாமல் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் தினசரி பஸ் வரும் என பஸ் நிலையத்திலும், சாலையோரங்களிலும் காத்திருந்து ஏமாந்து செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது. வேறு வழியின்றி தமிழக பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் காரைக்காலை சேர்ந்த சந்திரபிரியங்கா இருப்பதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com