டிரோன்கள்

புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் மனித சமுதாயத்தை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் தொழில்நுட்பங்களின் வரவு பல்வேறு தளங்களில் உதவியாக உள்ளது. அதில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது டிரோன்கள். கண்ணில் அகப்படாத செயல்கள் கூட இன்று கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. கண்களுக்கு தெரியாதது கூட இன்று கேமராவின் கண்களுக்கு அகப்பட்டு விடுகின்றன.
டிரோன்கள்
Published on

சினிமா காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த டிரோன் கேமராக்கள் மெல்லமெல்ல நகர்ந்து கல்யாண நிகழ்ச்சிகளில் கண்களை காட்டியது. இன்று அதையும் தாண்டி போராட்டக்களத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. ஒரு பெரிய சைஸ் வண்டை போல சத்தமிட்டுக்கொண்டு பறக்கும் இந்த டிரோன் கேமரா பல களங்களில் உதவ ஆரம்பித் திருக்கிறது. முக்கியமாக பாதுகாப்பு பயன்பாட்டில் டிரோன் கேமராவின் பங்கு ஏராளம். போலீஸ் முதல் எல்லையில் காவல் காக்கும் ராணுவம் வரை டிரோன் கேமராக்களை பயன்படுத்தி வருகின்றன. பல வகைகளில் கிடைக்கும் டிரோன், பறக்கும் நேரம், பறக்கும் தூரம், கேமராவின் தரம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் டிரோன், அதிக நேரம், நீண்ட தூரம் பறக்கக்கூடியதாக உள்ளது. ஆட்கள் நுழைய முடியாத மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் என இக்கட்டான நிலப்பரப்பில் எல்லாம் டிரோன் பறந்துகொண்டு மூன்றாம் கண்ணாக இருக்கிறது. லைவ் ஆக நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, வானில் இருந்து பார்க்கும் வசதியை கொடுப்பதால் டிரோன் கேமரா என்பது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவே பார்க்கப் படுகிறது.

திருமணங்கள், சுற்றுலா, திரைப்படக்காட்சிகள், திருவிழாக்கள், பேரிடர்கள், போராட்டங்கள், பாதுகாப்பு என பலவற்றுக்கும் பயன்படும் டிரோன் கேமரா, கழுகு பார்வையில் நம் கண்களுக்கு புதிய கோணத்தில் காட்சிகளை காட்டுகிறது.டிரோன் கேமராவை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்றாலும் சில கட்டுப்பாடுகளும் உண்டு. பாதுகாப்பு காரணங்களுக்காக அரசின் முக்கிய இடங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள், முக்கிய தலைவர்களின் சந்திப்பு போன்ற நேரங்களில் டிரோன் கேமராக்களை பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர்.

பறந்துகொண்டே கேமராவை தாங்கும் டிரோன் கான்செப்டில் ஆம்புலன்ஸ் தயாரிப்பு, உரம் தெளித்தல் போன்ற பல கண்டுபிடிப்புகளும் வந்து விட்டன. சில நிறுவனங்கள் டிரோன் மூலம் உணவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியை ஏற்கனவே தொடங்கியும் விட்டது.

வீட்டுக்குள் அமர்ந்து கொண்டே கையில் ரிமோட் உதவியுடன் இந்த உலகத்தை கண்காணிக்கும் நிலைக்கு டிரோன் கேமரா தொடக்கப் புள்ளியாகிவிட்டது. தற்போது எதிரியின் ரேடாரில் சிக்காமல் 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே பறந்து குறி தவறாமல் இலக்கை நோக்கி சுடும் டிரோன்கள் ராணுவ பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இது எதிர்வரும் காலங்களில் இன்னும் மேம்பட்டு ஏராளமான வசதிகளை கொண்டு வரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com