

கமல்ஹாசன் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில் உள்ள சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குனர் கபில்குமார் தெரிவித்துள்ள கருத்துகள்:-
கோட்சே கொலைக் குற்றத்திற்காக தான் தண்டிக்கப்பட்டார், பயங்கரவாத குற்றத்திற்காக அல்ல. எந்த ஒரு இந்திய நீதிமன்றமும் அவரை பயங்கரவாதி என்று பிரகடனம் செய்யவில்லை. இந்திய நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சாசனத்தை விட கமல்ஹாசன் உயர்ந்தவரா என்ன?
இந்துக்களை பற்றிய மனச் சிக்கல் கமல்ஹாசனுக்கு இருப்பதினால், அதை அவர் வெளிப்படுத்துகிறார். 1946-48 காலகட்டத்தில், இந்திய பிரிவினையை, காங்கிரஸ் கட்சியின் வலிமையற்ற தலைவர்கள் ஏற்றுக்கொண்டு பல சமரசங்களுக்கு உடன்பட்டதால், மக்களிடம் மனநிலை அன்று எந்த அளவுக்கு பாதிப்படைந்திருக்கும் என்பதை கமல்ஹாசன் உணரவேண்டும்.
பொது மக்கள் பிரிவினையை விரும்பினார்களா? நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இதற்காகத்தான் போரிட்டதா? புரட்சியாளர்கள் இதற்காகத்தான் தங்களின் உயிரை தியாகம் செய்தார்களா? பிரிவினையின் போது நடந்த படுகொலைகளுக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். கமல்ஹாசனின் வரையரையின் படி, பிரிவினையை ஏற்றுக் கொண்ட அனைவரும் பயங்கரவாதிகள் தான்.
காந்தியால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் தலைமை, பிரிவினை பற்றிய பேரங்களில், இறுதி முடிவு எடுப்பதில், அவரை முற்றிலும் புறக்கணித்து, அதன் மூலம் அவரை முதலில் அரசியல் ரீதியாக கொன்றனர். இரண்டாவதாக, பிரிவினை என்பது தன் பிணத்தின் மீது தான் நடைபெறும் என்று காந்தி அறிவித்துவிட்டு, பிறகு பிரிவினைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் அரசியல்ரீதியாக ஒரு தற்கொலை செய்து கொண்டார். இறுதியாக கோட்சே அவரை சுட்டுக் கொன்றார். ஆனால் அந்த சமயத்தில் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டிய அன்றைய பிரதமர் என்ன செய்தார்? காந்தியின் உயிருக்கு ஆபத்து என்று உளவுத் துறை எச்சரித்து இருந்தது.
வடமேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தானுக்கு செல்வதை எதிர்த்த பாத்ஷா அப்துல் காபர் கானை, காங்கிரஸ் கட்சி கைவிட்டது. காந்தி அவரிடம் பாகிஸ்தான் உருவாவதை தடுக்க முடியாது என்பதால் ஜின்னாவை ஆதரிக்குமாறு கூறினார். பாத்ஷா அப்துல் காபர் கான், தன் மகனுடன் பல வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடினார். ஒரு கிழக்கு பாகிஸ்தான் உருவாகும் போது, மேற்கு இந்தியாவிற்காக, அதாவது வடமேற்கு எல்லை மாகாணத்திற்காக ஏன் காங்கிரஸ் கட்சி போராடவில்லை?.
மேற்கு பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு தரைவழி இணைப்பு பாதையை அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இருந்தனர். பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய ரூ.50 கோடியை அளிக்கவும் தான்.
கொல்கத்தாவை ஜின்னா கோரிய போதும், மொத்த வங்காளத்தையும் சுகரவர்த்தி கேட்ட போதும், நேருவின் நிலைப்பாடு என்ன? ஷியாமா பிரகாஷ் முகர்ஜி தான் இன்றைய மேற்கு வங்கத்தை காப்பாற்றினார்.
பிரிவினைக்கு பிறகு எந்த நாட்டுடன் சேருவது என்பதை பற்றி பஞ்சாபில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பை, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஏன் வலியுறுத்தியது? இதன் காரணமாகவே ஒரு அகதி பெண்மணி, நேருவிடம் இதை செய்ய, நீங்கள் ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? என்று சீறினார். நாட்டை பற்றி அக்கறை கொண்டவர்கள் அன்று சந்தித்த மன அழுத்தத்தை பற்றி இன்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை நான் சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் பல துரோகங்களை சுட்டிக் காட்ட முடியும். காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்று கடமைகளை செய்து முடித்துவிட்டதால், இனி அதை கலைத்து விட வேண்டும் என்றார் காந்தி. இது அதிகாரத்தை கைப்பற்றி, அதை சுவைக்க துடித்த பல காங்கிரஸ் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்தது. ஆனால் இதை கண்டு மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தனர் என்று மவுலானா ஆசாத் கூறியதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கமல்ஹாசனின் அறிக்கை, வரலாற்று உண்மைகளுக்கும், நீதிமன்ற ஆவணங் களுக்கும் முற்றிலும் முரணானது. உள்நோக்கம் கொண்ட, தவறான அறிக்கை. மதவெறியை, ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பயன்படுத்தும், இன்றைய பயங்கரவாதிகளுக்கு சாதகமானது. கமல்ஹாசன், இலங்கை, சீனா, ரஷியா, போலந்து நாடுகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்.