

புது டெல்லி,
ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான பேராசிரியர் ஜிகோரோவின் 161 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், தனது டூடுல் மூலம் அவரை குறித்த படத்தொகுப்பை வைத்து கவுரவித்துள்ளது.
சிறுவயது வாழ்க்கை
கனோ ஜிகோரோ ஷிஹான்(1860-1938), 1860ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி, ஜப்பான் நாட்டிலுள்ள மிகாகேவில் பிறந்தார். தன்னுடைய 11ம் வயதில் அவர் டோக்கியோ நகரத்துக்கு குடியேறினார். குழந்தைப் பருவத்திலேயே மேதையாக கருதப்பட்டாலும், பல்வேறு துன்பங்களை அவர் சந்தித்தார். அதன் காரணமாக, தான் வலிமையானவராக வேண்டி பழங்கால தற்காப்பு கலையான ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையை கற்க ஆரம்பித்தார்.ஜூஜிட்ஸூ கலையை பயிற்றுவிக்கும் ஆசிரியரும் முன்னாள் சாமுராயுமான புகூடா ஹச்சினோ-சுகேவிடம் அந்த கலையை கற்று தேர்ந்தார்.
ஜூடோ உருவான விதம்
கனோ ஜிகோரோ, தான் பங்கேற்ற ஒரு ஜூஜிட்ஸூ போட்டியின் போது, மேற்கத்திய மல்யுத்த போட்டிகளில் பின்பற்றப்படும் சில நகர்வு முறைகளை இணைத்து சண்டையிட்டார். அதன்மூலம், எதிராளியை வீழ்த்தி வெற்றி கண்டார். ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையில் பல அபாயகரமான சண்டை முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு பாதுகாப்பான விளையாட்டு முறையாக ஜூடோ கலையை உருவாக்கினார்.அவரின் தனித்துவமான தத்துவங்களான செய்ர்யோகு-ஸென்யோ மற்றும் ஜிடா-க்யோஎய் ஆகியவற்றை சார்ந்து இந்த கலையை உருவாக்கினார்.
ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையின் மேம்படுத்தப்பட்ட மற்றும் மாறுபட்ட வடிவமாக ஜூடோ உருவானது. அதன்மூலம், நீதி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் அடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டாக ஜூடோவை மாற்றினார்.
பேராசிரியர் ஜிகோரோவின் 161வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஓவியர் சிந்தியா யுவான் செங் என்பவரால் இந்த கூகுள் டூடுல் பதிவிடப்பட்டுள்ளது.
கனோ ஜிகோரோ 1882ம் ஆண்டு தன்னுடைய சொந்த தற்காப்பு கலை பயிலரங்கத்தை தொடங்கினார். டோக்கியோவில் கொடோகன் ஜூடோ நிறுவனத்தை தொடங்கினார். அதன்மூலம், ஜூடோ கலையை மேம்படுத்தினார். 1893ம் ஆண்டு முதல் பெண்களையும் இந்த கலையில் ஈடுபடச் செய்தார்.
இதையும் படியுங்கள்:உணவகமாக மாறிய விமானம் !
போர்களில் வெற்றி பெறுவதைக் காட்டிலும், ஒருவரது உடலையும் ஆவியையும் பயிற்றுவிப்பதே ஜூடோவின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது.ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகள் குழந்தைகளுக்கு மரியாதை மற்றும் ஒழுக்கத்தை கற்றுத் தருவதாக ஜப்பானில் நம்பப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூடோ கற்றுத் தரப்படுகிறது. ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, ரஷியா, கனடா உள்பட பல நாடுகளில் இன்றளவும் 4 கோடி மக்களால் ஜூடோ கலை பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் உலக ஜூடோ தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பேராசிரியர் ஜிகோரோ, 1909ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் ஆசியாவைச் சார்ந்த முதல் உறுப்பினர் ஆனார்.ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ விளையாட்டாக 1960ம் ஆண்டு ஜூடோ சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.