ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் அறிவிப்பு வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - வளர்ச்சி மதிப்பீடு 5 சதவீதமாக நீடிக்கிறது

பாரத ரிசர்வ் வங்கி நேற்று தனது நிதிக்கொள்கை முடிவுகளை அறிவித்தது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் இவ்வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே ரெப்போ ரேட் 5.15 சதவீதமாக நீடிக்கிறது. அதற்கேற்ப ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் 4.90 சதவீதமாகவே உள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி 5 சதவீதமாக நிலை நிறுத்தி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் அறிவிப்பு வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - வளர்ச்சி மதிப்பீடு 5 சதவீதமாக நீடிக்கிறது
Published on

மும்பை

ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) ஆறாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சக்தி கந்ததாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஏழாவது முறையாக இவ்வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது.

சக்தி கந்ததாஸ் உள்பட நிதிக்கொள்கை கமிட்டியின் 6 உறுப்பினர்களுமே வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்க வாக்களித்தனர். எனவே ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் முறையே 5.15 சதவீதம் மற்றும் 4.90 சதவீதமாக நீடிக்கின்றன.

மொத்தம் 1.35 சதவீதம்

நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி அன்று வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. நடப்பு நிதி ஆண்டில் முதல் முறையாக ஏப்ரல் 5-ந் தேதி வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆகஸ்டில் அதிரடியாக 0.35 சதவீதம் குறைக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ஐந்தாவது வட்டிக் குறைப்பு நடவடிக்கையாக அது இருந்தது. ஆக, வட்டி விகிதம் மொத்தம் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாததால் பழைய நிலையே நீடித்தது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

சில்லரை விலை பணவீக்கம்

வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே அது பற்றிய மதிப்பீடுகளையும் இவ்வங்கி வெளியிட்டுள்ளது. நான்காவது காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) சில்லரை விலை பணவீக்கம் 6.5 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தனது முந்தைய ஆய்வறிக்கையில் தெரிவித்து இருந்தது. இப்போது அந்த மதிப்பீட்டிலும் மாற்றம் இல்லை. 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்துள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை நிலவுவதே இதற்கு காரணமாகும். எனினும் எதிர்வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டில் 6 சதவீத வளர்ச்சியை ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

அடுத்த ஆய்வுக்கூட்டம்

பாரத ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கிறது. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக் கூட்டம் மார்ச் மாதம் 31-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளிவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com