

பொது முடக்கத்தின்போது, வீட்டிலிருந்த மசாலா பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. என்ன செய்வது என குழம்பிக் கொண்டிருந்தவர், தானே மசாலா பொருட்களை தயாரிக்க தொடங்கினார். இதுவே அவர் தொழில் முனைவோராக மாறவும் காரணமானது. கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தபடியே மசாலா பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தினமும் 1,500 ஆர்டர்கள் வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், மெஹெர். தமது வெற்றிப் பயணம் குறித்து விவரிக்கிறார்.
பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்தேன். இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தேன். அதன்பிறகு 3 ஆண்டுகள் லண்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றிவிட்டு, கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினேன். இங்கு வந்ததிலிருந்து ஏதாவது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.அதற்கு தொழிற்துறை அனுபவம் தேவை. அதற்காக, மும்பையில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். எனினும், சில மாதங்களிலேயே கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் சண்டிகருக்குத் திரும்பினேன்.அந்த சமயத்தில் சமையலில் எனது ஈடுபாடு அதிகமானது. இந்தச் சூழலில் வீட்டில் இருந்த மசாலாப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்தன. இந்த மசாலாப் பொருட்களை எல்லாம் என் தந்தை கேரளாவிலிருந்து பெற்று வந்தார். கொரோனா காலத்தில் அங்கிருந்து மசாலாப் பொருட்களைப் பெறுவது சாத்தியம் இல்லாமல் போனது. ஒரே இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மசாலாப் பொருட்களை வீட்டிலிருந்தே தயாரித்தேன். இந்த அனுபவத்தில் கடந்த ஆண்டு இறுதியில் மசாலாப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அதிக முதலீடு செய்யவில்லை. விற்பனை அதிகரிக்க, அதிகரிக்க முதலீட்டையும் அதிகரித்தேன். முதலில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் எனது மசாலாப் பொருட்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தினேன்.
சொந்தமாக வலைத்தளத்தையும் தொடங்கினேன். இதன் காரணமாக எங்கள் வலைதளத்தின் லிங்கை மக்கள் பகிர ஆரம்பித்தார்கள். இதனையடுத்து வாடிக்கையாளர்களின் எண் ணிக்கையும் உயர்ந்தது. அதன்பின்னர் டிஜிட்டல் சந்தைப்படுத்துதலை கையில் எடுத்தேன். கூகுள் வழியே விளம்பரப்படுத்தினேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எங்கள் மசாலாப் பொருட்களின் தேவையும் அதிகரித்தது. நாடு முழுவதும் இருந்து படிப்படியாக எங்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியது. நாளுக்கு நாள் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேகாலயாவில் இருந்து மஞ்சளையும், சில பொருட்களை கேரளாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வரவழைத்து மசாலாப் பொருட்களை தயாரிக்கிறோம். எங்களிடம் இயந்திரம் ஏதும் இல்லை. 4 பெண்களை வேலைக்கு அமர்த்தி இந்தப் பணியை செய்கிறோம். மசாலாப் பொருட்களின் பாக்கெட்களிலேயே எல்லா விவரத்தையும் குறிப்பிட்டுள்ளோம். இந்தப் பொருட்களுடன் ரசாயனம் ஏதும் கலப்பதில்லை என்பவர் இந்த மசாலா விற்பனை தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்க முடியும் என்றும் சொல்கிறார்.
ஆரம்பத்தில் ரூ.20 ஆயிரம் செலவில் கிரைண்டர் வாங்கினால் போதும். விற்பனை அதிகரித்ததும் படிப்படியாக உற்பத்தியையும் அதிகரிக்கலாம். மசாலாப் பொருட்களை தயாரிப்பதற்கு முன்பு, அது குறித்த அனைத்து விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மசாலா தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் எந்த மாநிலங்களில் கிடைக்கின்றன என்பதையும், ஏற்கனவே சந்தையில் உள்ள மசாலாப் பொருட்கள் விலை குறித்தும், நீங்கள் புதிதாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பது குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்துகொண்டால் மசாலா தயாரிப்பு தொழிலில் வெற்றி நிச்சயம் என்றார்.
கடந்த ஆண்டு இறுதியில் மசாலாப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அதிக முதலீடு செய்யவில்லை. விற்பனை அதிகரிக்க, அதிகரிக்க முதலீட்டையும் அதிகரித்தேன்.