வீட்டுக்குள் 'மணி பிளான்ட்' வளர்ப்பதன் ரகசியம் என்ன?

‘மணி பிளான்ட்' செடியை வளர்ப்பதினால் வீட்டில் பணம் பெருகும் என்பது ஐதீகமாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே மணி பிளான்ட் செடியை பெரும்பாலானோர் வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.
வீட்டுக்குள் 'மணி பிளான்ட்' வளர்ப்பதன் ரகசியம் என்ன?
Published on

வீடுகளில் அலங்காரத்துக்காக செடிகள் வைப்பது வழக்கம். இதில் விலையுயர்ந்த செடிகள் கூட இடம்பெறுகின்றன. ஆனால் வீட்டின் உள்ளே ஏன் சமையல் அறையில் கூட செடி வளர்க்கும் பழக்கம், இப்போது மேலோங்கி வருகிறது. அந்த செடிக்கு பெயர்தான் 'மணி பிளான்ட்'. இப்போது அனைத்து வீடுகளிலும் இந்த செடியை பார்க்க முடிகிறது.

செடிகள் அலங்காரத்துக்காக வைக்கப்படுவதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 'மணி பிளான்ட்' அப்படி இல்லை. இது அழகுக்காக வைக்கப்படுவது இல்லை. மாறாக இந்த செடி வீட்டின் ஹால், சமையலறை உள்பட வீட்டுக்குள் வைக்கும் அளவுக்கு என்ன ரகசியம் இதில் புதைந்து இருக்கிறது? என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

இவ்வளவு பாதுகாப்பாக வீட்டின் உள்ளே வைத்து வளர்க்கும் இந்த செடியின் விலை, வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமோ? என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதுபோன்று எதுவும் இல்லை.

ஐதீகம்

'மணி பிளான்ட்' 30 ரூபாயில் இருந்தே நர்சரி கார்டன்களில் கிடைக்கிறது. செடியின் அளவை பொறுத்து விலை மாறுபடும். அதிகபட்சமாக ரூ.1,000-க்குள் தான் இது விற்பனை செய்யப்படுகிறது.

அலங்காரச் செடிகள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான விலையில் வாங்கி பங்களா மற்றும் பெரிய நிறுவனங்களின் வெளியில் அழகுக்காக வைக்கப்படும் நிலையில், 30 ரூபாய்க்கு வாங்கும் மணி பிளான்ட்டை மட்டும் வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது ஏனோ? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும்.

'மணி பிளான்ட்' என்ற பெயரிலேயே பணம் என்பதை தாங்கி சுமக்கிறது. அதிலேயே இதன் ரகசியம் வெளிப்பட்டுவிட்டது. அதாவது, இந்த செடியை வளர்ப்பதினால் வீட்டில் பணம் பெருகும் என்பது ஐதீகமாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே மணி பிளான்ட் செடியை பெரும்பாலானோர் வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதற்கு இடம் பெரிய அளவில் தேவையில்லை. படரும் வகையில் வளரக்கூடிய இந்த செடியை முறைப்படி பராமரிப்பது அவசியமாக இருக்கிறது. அதிக வெயில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த செடி வீட்டிற்குள்ளும், சூரிய ஒளி அதிகம் படாத இடத்திலும் வைத்து வளர்க்கிறார்கள்.

திருடி வைத்தால்...

அதிலும் வாஸ்து படி வீட்டின் தென்கிழக்கு திசையில் இந்த செடியை வைத்தால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும் என்கின்றனர், ஜோதிடர்கள். அதுமட்டுமல்லாமல், இந்த செடி வாடினால், வீட்டில் உள்ளவர்களும் மனகஷ்டத்தால் வாடிப்போவார்கள் என்றும், பழுத்த இலைகள் இல்லாமல் அவ்வப்போது அதனை பராமரிக்க வேண்டும் என்றும், அது வீட்டில் உள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களும் இந்த மணி பிளான்ட்டிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த செடியை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது எனவும், அவ்வாறு கொடுத்தால் அதிர்ஷ்டங்களை தாரைவார்ப்பதற்கு சமம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடையில் பணம் கொடுத்து வாங்குவதைவிட, யாராவது வீட்டில் வைத்திருக்கும் இந்த மணி பிளான்ட் செடியை திருடி வைத்தால் மேலும் நல்லது நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

மணி பிளான்டை போல, 'லக்கிபேம்போ' செடியும் பண அதிர்ஷ்டத்தை வாரித்தரும் செடியாகவே கூறப்படுகிறது. இந்த செடி ரூ.250-ல் இருந்து ரூ.850 வரை கிடைக்கிறது. சிலர் இந்த நம்பிக்கையையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, செடி வளர்ப்பது மனதுக்கு பிடித்தமான செயலாக கருதி வளர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

சாத்தியம் இல்லை

மணி பிளான்ட், லக்கிபேம்போ வளர்ப்பதின் ரகசியம் அனைத்தும் உண்மைதானா? அவ்வாறு எதுவும் நடக்கிறதா? என்பது பற்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுவாமி கண்ணன் பட்டாச்சாரியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மணி பிளான்ட் இந்தியாவை சேர்ந்த செடி வகை கிடையாது. இது ஒரு பூக்காத தாவரம். இந்த செடி மாசை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இதை வைப்பதால் பணம் வரும் என்று சாஸ்திரத்தில் எங்கும் சொல்லவில்லை. சாஸ்திரத்தில் துளசி, கற்பூரவள்ளி, தொட்டாச்சிணுங்கி ஆகியவற்றை வைப்பதுதான் விசேஷம் என்று சொல்லப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் ஏதாவது ஒரு பயன் இருக்கிறது என்று சொன்னால்தான், அதனை மக்கள் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் தான் இதுவும் பரப்பப்பட்டு இருக்கலாம். எனவே மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல், செடிகளை விற்பனை செய்யும் எம்.கனவாபீர் என்பவர் கூறும்போது 'அது அவரவருடைய ஐதீகம். இன்று இடம் வாங்கி வீடு கட்டும் பெரும்பாலானோரின் வீடுகளில் இந்த செடி இல்லாமல் இருக்காது. இது இன்று, நேற்று அல்ல. எனக்கு தெரிந்து 18 ஆண்டுகள் நான் இந்த வியாபாரம் செய்கிறேன். அப்போது இருந்து இந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com