

தர்மத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது, மக்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்படும் காலத்திலே, எல்லாம் வல்ல இறைவன், மனித உருவத்திலே இந்த பூவுலகில் அவதாரம் செய்து, மக்களைக் காப்பாற்றி அருள்பாலிக்கிறார். மக்களை நல்ல உபதேசங்கள் மூலமாக நல்வழிப்படுத்தி, இறைவன் குருவாகவும் திகழ்கிறார்.
கிருஷ்ண அவதாரத்திலே, பகவத்கீதையின் மூலமாக மனிதன் நாகரிகம் வளர்வதற்கான தெளிவான உபதேசங்களை அளித்திருக்கிறார். மனிதப் பிறவி என்பது இறைவனின் அருளால் நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம். இந்த அரிய பிறவியிலே இறைவனுடைய தத்துவங்களை நாம் அறிய முற்பட வேண்டும். இந்தப் பிறவியானது புனிதப் பிறவியாக உயர்வதற்கு, சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். பிறான் பசி, தாகம், அறியாமையை போக்குவதற்கு, சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். முதியவர்களை நல்ல விதமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குரு பக்தியுடன் கல்வியை கற்க வேண்டும். மனிதப் பிறவியிலே நாம் தெய்வ பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த மனிதப் பிறவி, நிலையானது இல்லை. ஆனால் அந்த பிறவியின் மூலமாக செய்யக்கூடிய நற்செயல்களும், அதனால் கிடைக்கக்கூடிய புண்ணியங்களும் நிலையானது. ஆகையால்தான், நம்முடைய தமிழ் சமுதாயம், இளமையில் கல், அறம் செய்ய விரும்பு, ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பது போன்ற பல அறிவுரைகளை நமக்கு அளித்திருக்கிறது.
நாம் பிறவிகள் எடுப்பதற்கும், அதன் மூலமாக பல நல்ல பணிகளைச் செய்வதற்கும், நற்பணிகளை செய்ய முற்படுவதற்கும் கூட இறைவனின் அருள் தேவை. இந்தப் பிறவியில் நமக்கு நன்மை தரக்கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, நம் வாழ்வில் ஒளி வெள்ளம் ஏற்பட வேண்டும். அந்த ஒளி.. பிரகாசம்.. ஜோதி.. நம் வாழ்வில் தோன்ற தீபாவளிப் பண்டிகை உதாரணமாகத் திகழ்கிறது.
கிருஷ்ண பரமாத்மாவினால் ஆரம்பிக்கப்பட்ட, அனுசரிக்கப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட, தீபாவளி பண்டிகை அன்று, அனைவரும் காலையிலேயே நீராட வேண்டும். அது லட்சுமி கடாட்சத்தையும், கங்கை நதியில் நீராடிய புண்ணியத்தையும் தரும். இப்படி அருளையும், பொருளையும் பெற்று, நம்முடைய நாடும், இந்த உலகமும் சிறப்பாக விளங்குவதற்கு, எல்லாம் வல்ல இறைவனான கிருஷ்ண பரமாத்மாவையும், அழகான காஞ்சியில் புகழோடு வாழ்ந்திடும் காமாட்சி அம்மனையும் பிரார்த்தனை செய்வோம்.