முக கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்தால்...

முக கவசம் அணிந்தபடி கடுமையான உடற் பயிற்சிகளை செய்பவர்கள் சுவாசம் சார்ந்த சில பிரச்சினைகளை எதிர்கொண்டது அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
முக கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்தால்...
Published on

உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் தேவையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. முக கவசம் அணிந்தபடி கடுமையான உடற் பயிற்சிகளை செய்பவர்கள் சுவாசம் சார்ந்த சில பிரச்சினைகளை எதிர்கொண்டது அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் முக கவசம் அணிந்தபடியே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடலாமா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆரோக்கியமான உடல்வாகுவை கொண்டிருப்பவர்களுக்கு முக கவசம் பாதுகாப்பானது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட குழுவினர் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை முக கவசம் அணிய வைத்தும், அணிய வைக்காமலும் பரிசோதித்திருக்கிறார்கள். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது அவர்களின் சுவாசம், மூச்சை இழுத்து வெளியிடும் கால அளவு, இதயத்தின் செயல்பாடு, உடற்பயிற்சியின் செயல்திறன் போன்றவை குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இறுதியில் முக கவசம் அணிந்தும், அணியாமலும் உடற்பயிற்சி செய்யும்போது சில அளவீடுகள் மாறுபட்டு காணப்பட்டாலும் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

சுவாசத்தின் வழியே கண்ணுக்கு தெரியாத அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவதுதான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் என்பதை நாங்கள் அறிவோம். ஜிம் போன்ற உள்ளரங்குகளில் கடினமாக உடற்பயிற்சி செய்யும்போது சுவாசிப்பதில் ஏற்படும் சிக்கல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இதுபற்றிய தெளிவான முடிவுக்கு வர, 40 வயது நிரம்பிய உடற்பயிற்சி ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டோம். அவர்களை மூன்றுகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினோம்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நீல நிறமுடைய சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்தபடி முதல் சுற்று உடற்பயிற்சியை மேற்கொள்ள வைத்தோம். அடுத்த சுற்றுகளில் வடிகட்டும் தன்மை கொண்ட எப்.எப்.பி.2 மாஸ்கை அணிந்தபடி செயல்பட்டார்கள். அப்படி முக கவசம் அணிந்தபடி உடற்பயிற்சி செய்தவர்களின் சுவாசம், இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை கணக்கிட்டோம். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. உதாரணமாக ஏரோபிக் உடற்பயிற்சி செய்தவர்களை ஆய்வு செய்தபோது அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உடற் பயிற்சி திறனில் சராசரியாக 10 சதவீதம் குறைந் திருந்தது. முக கவசம் வழியாக சுவாசிப்பதற்கு சற்று கடினமாக இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

முக கவசம் அணிந்தபடி உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது, அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டு வேலைகள் செய்வது, கடினமாக உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது முக கவசம் அணிந்தால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com