ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

மிழகத்தில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரி கூறினார்.
ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
Published on

பொறையாறு:

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரி கூறினார்.

மின்சார பெருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு நாகை மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நோடல் அலுவலர் கே.சதீஷ்குமார் வரவேற்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜ்குமார், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி செயற்பொறியாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னேற்றங்கள்

விழாவில் மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் பேசியதாவது:-

மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு செயல்பாட்டை எடுத்து காட்டவும், மின்துறையின் சாதனைகளை பறைசாற்றவும், இந்த பெருவிழா நடத்தப்படுகிறது.

மேலும் அதிக அளவில் பொதுமக்கள் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் மின்சார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்திகளை குடிமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கதோடு இந்த விழா நடைபெறுகிறது.

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அளவில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு 20.6.2021 முதல் 18.7.2022 வரை 9 லட்சத்து 82 ஆயிரம் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு 9 லட்சத்து 72 ஆயிரத்து 180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி மின் பொறியாளர்கள் அன்புச்செல்வன், அருள்செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல்வஹாப் மரைக்காயர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com