

சென்னை,
அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேர் எதிரே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்தவகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், அம்பேத்கருக்கு தி.மு.க. சார்பில் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளோம். அம்பேத்கர் இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தவர். தாழ்த்தப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய வழி நின்று தொடர்ந்து தி.மு.க. தன்னுடைய கடமையை நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சு.திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் மாநில செயலாளர் ஜி.தமிழ்ச்செல்வன் உள்பட நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாவட்ட நிர்வாகிகள் மடிப்பாக்கம் ரவி, பாலமுருகன், முருகேச பாண்டியன், நாகராஜன் மற்றும் செய்தி தொடர்பாளர் சந்தானம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைமை நிலைய செயலாளர் சேகுவாரா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்பட சில கட்சி நிர்வாகிகளும் கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கும், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ராயபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தன்னுடைய டுவிட்டர் பதிவில், இந்திய அரசியல் சாசன சிற்பி, எல்லோரும் சம உரிமை பெற பாடுபட்ட போராளி அம்பேத்கர். அவருடைய பிறந்தநாளில் அவரை போற்றிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்வோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தின் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட அதிகாரிகளும், அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர், பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தலித் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் அன்பின் பொய்யாமொழி, அவருடைய மனைவி கலைமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் அண்ணாநகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக தலித் கட்சியின் தலைவர் டி.டி.கே. தலித் குடிமகன் துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கும், மக்கள் நீதிக் கட்சியின் மாநில தலைவர் பி.அம்பேத் வெங்கடேஷ் சென்னை பட்டாளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், சமூக நீதி மக்கள் இயக்கத்தின் நிறுவனர் ஏ.கே.அம்பேத்கர்தாசன் சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், அம்பேத்கர் முன்னணி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தின்டிவனம் ஸ்ரீராமுலு பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.