டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
Published on

நாகர்கோவில், 

சேவை குறைபாடு காரணமாக டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

எஸ்.ஐ.சி. அதிகாரி

குமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் அருள் தம்பி ஜோன்ஸ், எல்.ஐ.சி. அதிகாரி. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ரெயில் நிலையம் செல்வதற்காக வீட்டில் இருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் வாடகை காரை முன்பதிவு செய்திருந்தார்.

அப்போது வந்த டிரைவர் செலுத்த வேண்டிய கட்டணத்தை விட 100 ரூபாய் அதிகம் தர கேட்டுள்ளார். அதற்கு அருள்தம்பி ஜோன்ஸ் மறுக்கவே கார் முன்பதிவை டிரைவரே ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து அதே தனியார் டிராவல்ஸ் நிறுவன செல்போன் செயலி மூலம் மற்றொரு வாடகை காரை முன்பதிவு செய்தார்.

மன உளைச்சல்

ஆனால் இரண்டாவது வந்த டிரைவரும் கட்டணத்தை விட 100 ரூபாய் அதிகம் தர வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அருள்தம்பி ஜோன்ஸ் மறுபடியும் மறுக்கவே கோபமடைந்த டிரைவர் வாடகை காரில் ஏற்றி வைத்த அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். இந்த தாமதத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் நிலையத்தை அவரால் அடைய முடியாமல் போய் விட்டது. இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் மூலம் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அருள் தம்பி ஜோன்ஸ் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.15 ஆயிரம் அபராதம்

வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி ரூ.15 ஆயிரம் அபராதமும், இதனை பாதிக்கப்பட்ட அருள் தம்பி ஜோன்சுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் பயணம் தொடர்பான செலவுத் தொகை ரூ.16 ஆயிரத்து 688 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com