சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற இந்து ஆன்மிக கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்

சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர் என்று நிறைவு நாளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற இந்து ஆன்மிக கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
Published on

சென்னை,

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் மற்றும் பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில், சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து நேற்று வரை 6 நாட்களாக 11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடந்தது.

இறுதி நாளான நேற்று, இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான நாட்டுப்பற்றை வளர்த்தல்- பாரதமாதா, பரம்வீர் வந்தனம் என்ற தலைப்பில் தேசப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டும் வகையில் ராணுவ வீரர்களைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் புகழ்பெற்ற விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்தமான், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சாமி, மேஜர் ஜெனரல் முரளி கோபாலகிருஷ்ணன், கமாண்டர் டி.ஹரி ஆகியோர் ராணுவத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

தாய்நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களின் படங்கள் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வீரரின் பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் அந்த வீரரின் படமும் அவர் எந்த போரில் ஈடுபட்டார் என்ற விவரமும் வெளியானது. அப்போது ராணுவ உடையணிந்த மாணவர்கள் மறைந்த வீரர்களின் படங்களுக்கு முன்பு மரியாதை செலுத்தினர். தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள். பரம்வீர் சக்ரா குறித்து குறும்படமும் திரையிடப்பட்டது.

பாரத கலா மந்திர் சார்பில் நாட்டியாஞ்சலி, இளைஞர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்பற்றை வளர்த்தல், பெண்களை போற்றும் கள்ளர்களின் வாழ்வியல் முறை நிகழ்ச்சிகள் நடந்தது. கோவையில் இருந்து வந்திருந்த ஆதியோகி ரதம், ஆந்திர மாநிலத்தில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் ரதம் உள்ளிட்ட கோவில் ரதங்களை பார்வையிட்டனர்.

கண்காட்சியில் மாலை 6.15 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலையில் இருந்து ஸ்ரீசீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகள் கொண்டு வரப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில் கடந்த 6 நாட்கள் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சியில் மொத்தம் 18 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்று அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி கூறினார்.

நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி, தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, குழு உறுப்பினர் பி.வி.ஆர்.கிருஷ்ண ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com