சென்னை விமான நிலையத்தில் ஓராண்டில் ரூ.262 கோடி தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.262 கோடி மதிப்பிலான தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஓராண்டில் ரூ.262 கோடி தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் தங்கம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தலில் முக்கிய இடமாக உள்ளது. தலையில் 'விக்' வைத்தும், காலணி, மணிபர்சு மற்றும் உள்ளாடை ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்தும் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 234 வழக்குகளில் ரூ.70.12 கோடி மதிப்புள்ள 157.75 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடர்பாக சுமார் 144 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் போதை பொருள் கடத்தலும் அதிகளவில் நடைபெற்று உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் ரூ.181.51 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதில் அதிகபட்சமாக ரூ.170 கோடி மதிப்புடைய 25.44 கிலோ ஹெராயின் சிக்கியது. போதை பொருள் கடத்தல் தொடர்பாக 41 வழக்குகள் பதிவாகி உள்ளன. 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா.

அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர், சவுதி ரியால் உள்பட ரூ.10.42 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுமார் 43 வழக்குகளில் 36 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவைகள் தவிர மின்னணு சாதன பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், நட்சத்திர ஆமைகள், அரியவகை விலங்குகள், பழங்கால சிலைகள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றையும் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டது மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்ல முயன்றது என ரூ.262 கோடி மதிப்பிலான தங்கம், போதை பொருள் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com