தேர்தலில் வெற்றி பெற்ற 35 தி.மு.க. கவுன்சிலர்கள் கேரளாவுக்கு அழைத்து செல்லபட்டதால் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 35 தி.மு.க. கவுன்சிலர்கள் கேரளாவுக்கு அழைத்து செல்லபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற 35 தி.மு.க. கவுன்சிலர்கள் கேரளாவுக்கு அழைத்து செல்லபட்டதால் பரபரப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க. 44 இடங்களில் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை உறுப்பினர் ஆகியோர் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் வருகிற 2-ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு, உறுப்பினர்களாக பதவி ஏற்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வருகிற 4-ந்தேதி மேயர், துணை மேயர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது.

தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் மாநகராட்சியை கைப்பற்றி இருப்பதால் மேயர் பதவியை குறிவைத்து முக்கிய கவுன்சிலர்கள் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரம் சாதாரண வேட்பாளர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல துணை மேயர் பதவிக்கு பல முக்கிய பிரமுகர்கள் இப்போதே காய் நகர்த்தி வருகிறார்கள். தி.மு.க.வைச் சேர்ந்த பல பெண் கவுன்சிலர்களும், தங்களுக்கு துணை மேயர் பதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுதவிர சில முக்கிய கவுன்சிலர்களும் துணை மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தி.மு.க. கவுன்சிலர்களை யாரேனும் கடத்தி, தாங்கள் வெற்றி பெற அடித்தளம் அமைத்து விடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலான கவுன்சிலர்களை வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்படி, வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களில் சுமார் 35 பேர் நேற்று இரவு கன்னியாகுமரி புறப்பட்டு சென்றனர்.

இன்று அங்கிருந்து கேரள மாநிலம் பூவார் பகுதிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.

அங்கு அனைவரும் தங்க வைக்கப்பட்டு வருகிற 2-ந் தேதி உறுப்பினராக பதவி ஏற்கும் போதுதான், நெல்லை வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com