பயிற்சி டாக்டரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தாக்கி பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது


பயிற்சி டாக்டரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தாக்கி பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது
x

பயிற்சி டாக்டரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.21 ஆயிரத்தை ‘ஜி-பே’ மூலம் தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

நெல்லை,

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 4.5 ஆண்டுகள் படித்து முடித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலேயே பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் செயலி மூலம் சமீபத்தில் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த நபர், பயிற்சி டாக்டரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். இதனை நம்பி கடந்த 31-ந்தேதி நள்ளிரவில் பயிற்சி டாக்டர், தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை- தூத்துக்குடி சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் பயிற்சி டாக்டரிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அவர், பயிற்சி டாக்டரை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கையில் கட்டையுடன் வந்து பயிற்சி டாக்டரை சரமாரியாக தாக்கி பணம் கேட்டுள்ளனர். தொடர்ந்து அவரின் செல்போனை பறித்து வங்கி கணக்கில் இருந்த ரூ.21 ஆயிரத்தை ‘ஜி-பே’ மூலம் தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

அந்த கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த பயிற்சி டாக்டர் எந்த ஆஸ்பத்திரிக்கும் செல்லாமல் தானாகவே காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். நெல்லையில் பயிற்சி டாக்டரை தாக்கி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story