தினமும் 4 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு

சென்னை கொளத்தூர், ரெட்டை ஏரியை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் திறனுள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
தினமும் 4 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துப் பேசினார். பின்னர் அந்தத் துறைகளுக்கான 77 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மணலி பகுதியில் புழல் ஏரி உபரி நீர் வடிகால்வாயின் குறுக்கே ஆமுல்லைவாயில், வடபெரும்பாக்கம் மற்றும் பர்மா நகர் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டப்படும். சென்னை யானைக் கவுனி சாலையில் பழுதடைந்துள்ள மேம்பாலத்திற்கு பதிலாக புதியதாக மேம்பாலம் (ரெயில்வே பகுதி நீங்கலாக) கட்டப்படும்.

சென்னை ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக உயர்மட்ட பாலம் கட்டப்படும். சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்து பூமிக்கடியில் உள்ள மழைநீர் வடிகால் கட்டுமானத்தைப் பலப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்யப்படும்.

சென்னை திருவொற்றியூர், சின்ன போரூர், பெருங்குடி ஆகிய இடங்களில் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் 12 நீரிழிவு சிகிச்சை அலகுகள் அமைக்கப்படும்.

சென்னை கொளத்தூர், ரெட்டை ஏரியை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் திறனுள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னை, கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் விழிப்புணர்வு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் புதிய முயற்சியாக, திட்ட மதிப்பீட்டிலேயே உள்ளடக்கி சென்னை மாநகரப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வீட்டு இணைப்புகள் வழங்கப்படும். சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள குடிநீர் வினியோக கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். சென்னையில் உள்ள விடுபட்ட தெருக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் அமைக்கப்படும்.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப வழித்தட நிறுவனங்களுக்கு ஊரப்பாக்கம் அருகில் உள்ள கிளாம்பாக்கம் ஏரியை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வினியோக நிலையம் அமைத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

குடிநீர் வினியோகத்தில் புதிய முயற்சியாக அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் திட்ட மதிப்பீட்டிலேயே உள்ளடக்கி வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய முயற்சியாக திட்ட மதிப்பீட்டிலேயே உள்ளடக்கி பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாக அறிவிக்கப்படும். பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு கல்குவாரி நீர் ஆதாரத்தைக் கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உயிரி அகழ்வு (பயோ மைனிங்) முறையில் களைந்து நிலங்கள் மீட்டெடுக்கப்படும். 11 மாநகராட்சிகள் மற்றும் 124 நகராட்சிகளில் உள்ள பூங்காக்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் ஒரு லட்சம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 275 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய தி.மு.க. ஆட்சியின் முடிவில் தமிழகத்தில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 945 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 7 ஆயிரத்து 393 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

நெம்மேலியில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிக்கான, தொழில்நுட்ப மதிப்பாய்வு முடிவுற்று, அறிக்கை ஜெர்மானிய நிதி நிறுவனத்தின் ஒப்புதலுக்கு 13.4.2018 அன்று அனுப்பப்பட்டது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.

தேர்வாய் கண்டிகையில் இருந்து, கிருஷ்ணா கால்வாய் வரை 17 கி.மீ. நீளத்திற்கு, 900 மி.மீ. விட்டமுள்ள பிரதான நீருந்து குழாய்கள் பதிக்கும் பணிகள், விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளன. இத்துடன் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய இதர பணிகள் முடிவடைந்து, இப்புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி அக்டோபர் 2019-ம் ஆண்டில் நிறைவுபெறும்.

ஏழை, எளியோரின் பசியைப் போக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம், தமிழகத்தில் 658 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மே மாதம் வரை 96 கோடியே 39 லட்சம் இட்லிகளும், 34 கோடியே 43 லட்சம் பலவகை சாதங்களும், 23 கோடியே 37 லட்சம் சப்பாத்திகளும், மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன.

49 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 23 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 22 பேரூராட்சிகளில் நீண்ட காலமாக தீர்வு செய்யப்படாமலிருந்த பழைய கழிவுகள், உயிரி அகழ்வு முறையில் அகற்றப்பட்டு நிலங்கள் வள மீட்பு பூங்காக்களாக மேம்படுத்தப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை மையம் உருவாக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 500 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களுக்கு 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் 50 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், 385 கதிரடிக்கும் களங்கள், 15 ஆயிரம் கால்நடைத் தொட்டிகள், 650 கிணறுகள், 600 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள் மற்றும் 100 தரைப் பாலங்கள், 300 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் பாதை, 50 கிராம சந்தைகள், 3,708 அங்கன்வாடி மையங்களில் குழந்தை நேயக்கழிப்பறைகள் கட்டப்படும்.

சாலையோரங்களில் 10 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் ஊரகப் பகுதி குடியிருப்புகளில் 300 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் பாதைகளாக மேம்படுத்தப்படும்.

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் பணிபுரியும் 12 ஆயிரத்து 523 கணக்காளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் களப்பணிகள் வழங்கப்பட்டு மாதம் ஒன்றிற்கு மதிப்பூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பணப்பரிவர்த்தனைகள், பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 20 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை மொத்தம் 104 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 13 ஆயிரத்து 500 சுய உதவிக் குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ஆதார நிதியாக ரூ.20.25 கோடி வழங்கப்படும். தமிழ்நாட்டில் 385 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 300 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கப்படும்; 10 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஆதார நிதியாக ரூ.10 கோடி வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 25 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 70 மீன் வலை பின்னும் கூடம், 10 மீன்உலர் களங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் கடலோரப் பகுதி மக்களுக்கு, புதிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்காக 129 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வங்கிகளின் வியாபார மேம்பாட்டு முகவர்களாக மாற்றப்பட்டு, 30 ஆயிரம் பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக் கடன் வழங்கப்படும். மேலும் அந்த மாவட்டங்களில் ஆயிரம் மகளிர் கூட்டுப் பொறுப்புக் குழுக்களை ஏற்படுத்தி கடன் மற்றும் உள்கட்டமைப்பு வசதி போன்றவை வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com