ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் கொள்ளை

திருவாரூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் கொள்ளை
Published on

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

திருவாரூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு முருகபாண்டியன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

நவநீதகிருஷ்ணன் தற்போது திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பாதுகாப்பு ஊழியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்.

நகை- பணம் கொள்ளை

கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் நகைகள், பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் சோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் ஆண்டிபாளையம் பகுதி முழுவதுமாக போலீசார் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ கடப்பாரையால் உடைக்கப்பட்டு, கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com