தமிழக அனல் மின்நிலையங்களை முழுமையாக இயக்க தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும் மத்திய மந்திரிகளிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்

தமிழக அனல் மின்நிலையங்களை முழு கொள்ளளவில் இயக்க தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளிடம் தமிழக அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை விடுத்து உள்ளார்.
தமிழக அனல் மின்நிலையங்களை முழுமையாக இயக்க தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும் மத்திய மந்திரிகளிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி டெல்லி சென்று இருந்தார். அங்கு அவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய நிலக்கரி சுரங்கங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய ரெயில்வே துறை மந்திரி பியுஷ்கோயல், மத்திய எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை இணை-மந்திரி (தனிபொறுப்பு) ஆர்.கே. சிங் ஆகியோரை சந்தித்தார்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மந்திரிகளிடம் வலியுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி, அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 320 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட அனல்மின் நிலையங்களை முழு திறனில் இயக்குவதற்கு நாளொன்றுக்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் நாளொன்றுக்கு 61 ஆயிரம் டன் நிலக்கரி வினியோகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) இந்நிறுவனம் ஒப்பந்த அளவில் 60 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது. காற்றாலை மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம் என்றபோதும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் காற்றாலை மின்சாரம் கிடைக்காத காரணத்தால், வாரியத்துக்கு சொந்தமான அனைத்து அனல்மின் நிலையங்களையும் முழு உற்பத்தி திறனில் இயக்க வேண்டியுள்ளது.

வடமாநிலங்களில் மழை காலம் தொடங்கிவிட்டதால், நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தமிழகத்துக்கு நாள்தோறும் வழங்க வேண்டிய 72 ஆயிரம் டன் நிலக்கரியை முழுமையாக வழங்க வேண்டும். ரெயில்வே துறையும் தினமும் 20 ரேக்குகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மந்தாகினி-ஏ மற்றும் உட்கல்-சி ஆகிய இரு நிலக்கரி தொகுதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வடசென்னை 3-ம் நிலை மற்றும் உப்பூர் ஆகிய இரு அனல் மின் திட்டங்களின் பயன்பாட்டுக்காக ஆண்டொன்றுக்கு 5.913 மில்லியன் டன் அளவிற்கான நீண்ட கால நிலக்கரி இணைப்பை மகாநதி நிலக்கரி வளாக நிறுவனத்திடம் இருந்து வழங்க வேண்டும்.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், உடன்குடி மற்றும் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் ஆகிய அனல் மின் திட்டங்களின் பயன்பாட்டிற்காக ஆண்டொன்றுக்கு 9.214 மில்லியன் டன் அளவிற்கான இடைக் கால நிலக்கரி இணைப்பை மகாநதி நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. நிலக்கரி எடுப்புக்கு கால அளவை நீட்டிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து தேவையான உதவிகளை செய்வதாக மத்திய மந்திரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் வாரிய தலைவர் விக்ரம் கபூர், எரிசக்தித் துறை முதன்மை செயலர் முகமதுநஜிமுதின் ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com