

நாகாகோவில்,
நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரூ.19 ஆயிரம் முன் பணம் செலுத்தி திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். ஆனால் சில காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப்போய் உள்ளது. வேறொரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதியில் திருமண மண்டபம் காலியாக இல்லை. எனவே தான் செலுத்திய முன்பண தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அய்யப்பன் வக்கீல் மூலம் திருமண மண்டப செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அதை அய்யப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் முன்பணத் தொகை ரூ.19 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா.