வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்க கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on

சென்னை,

வங்க கடலில் கடந்த 21-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ந் தேதி நள்ளிரவு கரையை கடந்தது.

இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. அதிலும் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவானது.

அந்த புயல் நேற்று ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் வலுவிழந்த நிலையில் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் நிலவி வந்தது. தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்பட வடமேற்கு மாவட்டங்களில் நேற்று (நேற்று முன்தினம்) மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30-ந் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் தென் தமிழகத்தில் அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரளவுக்கும் மழை இருக்கும் என்று தற்போதைய நிலவரப்படி கணிக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வு மண்டலத்தில் இருந்து அடுத்த நிலையான புயலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றி வரக்கூடிய நாட்களில் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் 29 செ.மீ. மழைப்பொழிவுதான் தமிழகத்தில் இதுவரை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com