அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும் முன் அந்த நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து, பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. சிலையை மீண்டும் குளத்துக்குள் வைப்பதற்குள், அனந்தசரஸ் குளத்தை தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரித்தார். அப்போது, குளத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்ய தேவையில்லை. இயற்கையாகவே அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் சுத்தம் செய்து விடுகிறது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அனந்தசரஸ் குளத்தை எதிர்காலத்தில் சுத்தமாக வைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்தறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதால் தான், குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகிறது.

எனவே, மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதற்கு தடை விதிக்கப்படும். 24 மணி நேரமும் குளத்துக்கு காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குளத்தை ஆய்வு செய்வார்கள். குளத்தின் மண் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை கிடைப்பதற்கு 4 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், குளத்தில் நிரப்பப்போகும் தண்ணீரின் தன்மை குறித்து மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை வருகிற 19-ந்தேதி தாக்கல் செய்கிறோம் என்று கூறினார்.

இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். 17-ந்தேதி குளத்துக்குள் சிலை வைக்கப்பட உள்ளது. அப்படி இருக்கும்போது நீரின் ஆய்வு அறிக்கை 19-ந்தேதி தாக்கல் செய்வதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? இதுவரை சேகரித்த ஆய்வு அறிக்கையை நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளடர், சுத்தமான காவிரி ஆற்று நீரை கொண்டு குளத்தை நிரப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டோ, கோவிலில் உள்ள மற்றொரு குளமான பொற்றாமரை குளத்து நீரை கொண்டோ அனந்தசரஸ் குளத்தை நிரப்ப முடியும் என்றார்.

அதற்கு எந்த நீராக இருந்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, இன்று முதல் தினசரி அடிப்படையில் புகைப்படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அரசு பிளடர், மழை பெய்துவிட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, மழை நீரை விட சுத்தமான நீர் வேறு எதுவும் உள்ளதா? அப்படி மழை பெய்தால், அதுவே அனந்தசரஸ் குளத்துக்கு சிறந்த நீராக அமையும் என்றார். மேலும், குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் கனமழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com