புதிய செயற்கைகோளை தயாரித்த மாணவி

பூமி மாசு கண்டறிவதற்காக புதிய செயற்கைகோளை தயாரித்த மாணவியை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.
புதிய செயற்கைகோளை தயாரித்த மாணவி
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் அனிதா சாட் என்ற செயற்கைகோளை உருவாக்கிய திருச்சியை சேர்ந்த மாணவி வில்லட் ஓவியா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த மகத்தான சாதனை படைத்ததற்காக மாணவி வில்லட் ஓவியாவை, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பாக உண்ணாவிரதம் நடத்தினோம். சுப்ரீம் கோர்ட்டு மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

புதிய பாடத்திட்டத்தின்கீழ் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் மே மாத இறுதிக்குள் புதிய புத்தகங்கள் தயாராகிவிடும். இதர வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டிற்குள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வானவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 9-ந்தேதி 9 கல்லூரிகளில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செயற்கைகோள் வடிவமைத்த மாணவி வில்லட் ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது. உலகில் சவாலாக இருப்பது புவி வெப்பமயமாதல். இதனால் பல்வேறு விளைவுகளை நம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக நமது புவி வெப்பமயமாதலின் காரணமாக எந்த அளவிற்கு மாசுபட்டுள்ளது என்பதை கண்டறிய இந்த புதிய செயற்கைகோளை தயார் செய்துள்ளேன். மே மாதம் 6-ந்தேதி மெக்சிகோவிலிருந்து இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகளை செய்துவருகிறேன். இதற்கு ஊக்கமளித்துவரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com