பெரம்பலூர் அருகே விபத்து: மொபட் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது; விவசாயி சாவு

பெரம்பலூர் அருகே மொபட் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் அருகே விபத்து: மொபட் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது; விவசாயி சாவு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). விவசாயி. இவரது மகளை, தெரணி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். நேற்று காலை தனது மகள் வீட்டிற்கு சென்ற பெரியசாமி, மதிய நேரத்தில் ஒரு மொபட்டில், தனது மகளின் குழந்தைகளான அஜய் (5), பரணி (2) ஆகியோரை அழைத்துக்கொண்டு லாடபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த புனிதன் (57), அவருடைய மனைவியுடன் காரில் வந்தார். புனிதன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் உள்ள காரை பிரிவு சாலை எதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது கார் மோதியது.

இதில் மொபட் காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென்று மொபட்டும், அதைத்தொடர்ந்து காரும் தீப்பிடித்து எரிந்தன. இதில் பெரியசாமியும், அவரது பேரக்குழந்தைகள் 2 பேரும் தீக்காயம் அடைந்தனர். பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 2 குழந்தைகளுக்கும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கார் தீப்பிடித்ததும், புனிதன் மற்றும் அவரது மனைவி காரில் இருந்து இறங்கி விலகிச்சென்றதால், அவர்கள் காயமின்றி தப்பினர். ஆனால் காரில் இருந்த நில ஆவணம், சுமார் ரூ.1 லட்சம், 2 செல்போன்கள், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவை எரிந்து நாசமாகின. மேலும் மொபட் மற்றும் கார் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com