

சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் (தி.மு.க.) பேசினார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கோபமடையச் செய்தன. அந்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
மேலும், அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பதில் கருத்தைக் கூறினார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
அமைச்சர் டி.ஜெயக்குமார்:- கடந்த 2006-11-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றினர். இது சம்பந்தமாக வழக்கும் உள்ளது.
துரைமுருகன்:- அவர் பூடகமாக சிலர் மீது கூறும் குற்றச்சாட்டை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இது சம்பந்தமாக கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை. டி.என்.பி. எஸ்.சி.யில் தற்போது நடந்த முறைகேடுகளில் யார்-யார் கைது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் செய்தியாக வெளியே வந்துள்ளன. 2006-11-ம் ஆண்டுகளில் நடந்த சம்பவமும் அதுபோல வெளிவந்துள்ளன.
அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. யாருடைய பெயரையும் இங்கு குறிப்பிடவில்லை. பொதுவாக பேசப்பட்டுள்ளது. சில அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதமும் அப்போது கைப்பற்றப்பட்டது. ஆதாரத்துடன் அவையில் பேசப்பட்டு இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் பேசவில்லை.
தற்போது அந்த வழக்கில் கோர்ட்டில் தடையாணை பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று சொல்ல வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் யாரென்று நாங்கள் கோர்ட்டு வழக்குக்குள் செல்லாமல் மேலோட்டமாக சொல்கிறோம்.
அப்போது தி.மு.க. ஆட்சி நடந்தது. அந்த ஆட்சியிலும் தவறு நடந்தது என்பதைத்தான் அவர் கூறுகிறார். டி.என்.பி.எஸ்.சி.யை நம்பமுடியவில்லை என்றெல்லாம் தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் கூறும்போது, அவரும் தி.மு.க. ஆட்சியில் நடந்த சில செய்திகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லவில்லை.
எல்லாவற்றையும் மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கிறோம். ஆழமாகப் பேச வேண்டும் என்றாலும் எங்களிடம் எல்லா விவரங்களும் உள்ளன. அவற்றை வேண்டாம் என்று நினைக்கிறோம். 2011-ம் ஆண்டில் இருந்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. என்றைக்கோ அதை கொண்டு வந்திருக்கலாம். இது தேவையில்லாத விஷயம்.
டி.என்.பி.எஸ்.சி. தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் அரசு தலையிடுவதில்லை. 6,300 மையங்களில் தேர்வு நடந்தபோது 2 மையங்களில் மட்டும் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எதையும் மறைக்கவில்லை. செய்திகளாக பத்திரிகைகளில் வந்துள்ளன.
இதே செய்தி அப்போதும் வந்தது என்பதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டி இருக்கிறார். தவறு இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். உங்கள் மீது இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்க தயாரா? இதை நீங்கள் ஏற்கிறீர்களா?
அப்படியானால் கோர்ட்டில் இருந்து இந்த வழக்கை திரும்பப்பெறுங்கள். அதை இங்கு பதிவு செய்யுங்கள். கோர்ட்டில் நீங்கள்தான் தடையாணை பெற்றிருக்கிறீர்கள். ஆனால் எந்த கோர்ட்டில் எந்த வழக்காக இருந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்களும் தயாராக இருங்கள். மக்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும்.
துரைமுருகன்:- தவறை யார் செய்தாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.