கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
Published on

பயிற்சி வகுப்பு

பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பாக தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பு, மதுரை ஆவின் கூட்டரங்கில் நேற்று நடந்தது. மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி வரவேற்றார். ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் முன்னிலை வகித்தார்.

மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான, பணியாளர்கள் கலந்து கொண்டனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கான பணியாளர் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக இருந்த ஒவ்வொரு இடர்பாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் என்று இருந்ததை கடந்த 4 மாதங்களில் 30 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் வினியோக சங்கிலியை மேம்படுத்தியுள்ளோம். பாலின் தரத்திற்கேற்ற விலை என்று நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு பால் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு பாலின் தரத்தை அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் போட்டியை முறியடிக்க ஏதுவாக ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பால் உற்பத்தி குறைவு

தேசிய அளவிலும், மாநில அளவிலும் தற்போது பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கறவை மாடுகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிகளவிலும், தரமாகவும் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பால் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடவடிக்கை

பண்டிகை காலத்தில் ஆவின் நெய், பால்கோவா போன்ற இனிப்பு வகைகளின் தேவையை கணக்கிட்டு அதற்கேற்ப உற்பத்தியை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆவின் பால் பாக்கெட்களை நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், கமிஷன் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் செய்யலாம். தகுந்த ஆதாரத்துடன் வரும் புகார்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com