வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி மாதம் சிறப்பு முகாம்கள் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி மாதம் சிறப்பு முகாம்கள் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடந்தது.

அப்போது புதிய வாக்காளர்களாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 285 ஆண்களும், 2 லட்சத்து 19 ஆயிரத்து 735 பெண்களும், 283 மூன்றாம் பாலினத்தவரும் சேர்க்கப்பட்டனர்.

மேலும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 921 ஆண்கள், 1 லட்சத்து 39 ஆயிரத்து 662 பெண்கள், 149 மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

துணை வாக்காளர் பட்டியல் கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 571 புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலுடன் இந்த துணைப்பட்டியல் சேர்க்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் தற்போது உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர் ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர் பெண்கள், 5,924 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆகும்.

இந்த பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியலாக 23-ந் தேதி வெளியிடப்படும். அதை வாக்காளர்கள் பார்த்து அதிலுள்ள தங்களின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். புதிய வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 4 மற்றும் 5-ந் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), 11 மற்றும் 12-ந் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும்.

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், விவரங்களை திருத்துவது, பெயர் நீக்கம் போன்றவற்றுக்காக வாக்காளர்கள் தரும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக இந்த முகாம்களில் அலுவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து அதில் தேவையான திருத்தங்களை வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

பின்னர் அவற்றை இணைத்து பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com