தமிழக ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி அதிகாரம் -அரசாணை வெளியீடு

பணிகளை தாமாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் தமிழக ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி அதிகாரம் -அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்குவதற்காக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ம் ஆண்டு விதிகளின்படி, தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில், துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தபோது நிதி அதிகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது.

அரசாணை வெளியீடு

இந்த அரசு பதவியேற்றவுடன், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாக, உள்ளாட்சிகள் தினம், கிராம செயலகங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு, கிராம சபைக்கு உரிய அங்கீகாரம், பல்வேறு இணைய வழி சேவைகள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகன வசதிகள் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கூடுதல் நிதி அதிகாரம்

இந்த புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com