2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது.
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
Published on

சென்னை,

துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை கடந்த 9-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன், முன்னாள் உறுப்பினர்கள் பேராசிரியர் க.அன்பழகன், ப.சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் (10-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. 11-ந் தேதி முதல் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் வனம், சுற்றுச்சூழல் துறைகள் மீதும், 12-ந் தேதி பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, உயர் கல்வி துறைகள் மீதும், 13-ந் தேதி எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதும் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து, 14 மற்றும் 15-ந் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை வந்ததால் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகிறார். இறுதியாக தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com