

சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை தினமும் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நேற்று அஹாலே சுன்னத் வல் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் பேரணி நடைபெற்றது. இதில் முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்திய தேசிய கொடியையும் பலர் கையில் ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி அருகே தொடங்கிய பேரணி சிறிது தூரத்தில் நிறைவடைந்தது. அப்போது அஹாலே சுன்னத் வல் ஜமாத் கூட்டமைப்பின் அமைப்பாளர் சுலைமான் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் திரும்ப பெறப்படும் வரையில் நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.
இதே போன்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.