தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததும் கோமதிக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததும் தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததும் கோமதிக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற கோமதிக்கு அரசு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இதுபோன்ற கருத்து வேதனை அளிக்கிறது. விளையாட்டுத்துறைக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். விளையாட்டு துறைக்கு அ.தி.மு.க. அரசுதான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் அரசு எதுவும் கொடுக்க முடியாது. தேர்தல் ஆணையத்துக்கு அரசு கடிதம் எழுதி உள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததும் கோமதி மகிழ்ச்சி அடையும் வகையில் நிச்சயமாக அவருக்கு எல்லா உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்தால் அ.தி.மு.க. ஆட்சியை மாற்றிக்காட்டுவோம் என்று துரைமுருகன் கூறுவது இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கும். இதுபோல் சொல்லியே இந்த பழம் புளிக்கும் என்ற நிலை வந்துவிட்டது. இது நடக்காத காரியம்.

ஜூன் 3-ந்தேதி ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார். இந்த ஜூன் அல்ல 2021-ம் ஆண்டு ஜூன் வரும்போதுகூட அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும். 2021-ம் ஆண்டு பொது தேர்தலிலும் அ.தி.மு.க தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தி.மு.க.வின் பி டீம் தான் டி.டி.வி.தினகரன். பி டீமும் ஏ டீமும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அரங்கேற்றிய நாடகங்கள் நிறைவேறவில்லை. அ.தி.மு.க. அரசு தொடரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். இதனால் அவர்கள் ஆசை நிறைவேற போவதில்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுதேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டுமின்றி இனி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக கொறடா ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் அளித்து உள்ளார். இதில் சபாநாயகரின் நடவடிக்கை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.

ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். அதை முழுமையான அளவுக்கு வணிகர்கள், மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழக அரசு அழுத்தம் தந்து 70 சதவீத பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 30 சதவீத பிரச்சினைகளும் வருங்காலத்தில் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com