அரக்கோணம் படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ் அறிக்கை

அரக்கோணம் படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அரக்கோணம் படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில் பா.ம.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளை புதைப்பதால் மறைத்து விட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையே தான் பா.ம.க.வும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பா.ம.க.வின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.

உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் ப.சிவகாமி பா.ம.க.வுக்கு ஆதரவானவர் அல்ல. பா.ம.க. மீது பல்வேறு தருணங்களில் தெரிந்தே அவதூறுகளை பரப்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அரக்கோணம் படுகொலைகள் தொடர்பான விசாரணையில் அறத்தின் பக்கம் நின்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ப.சிவகாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது; இது பாராட்டப்பட வேண்டியதாகும். அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என உண்மை கண்டறியும் குழு கூறி விட்ட நிலையில், பா.ம.க. மீது அவதூறு பழிகளை சுமத்திய பாவிகள் என்ன செய்யப் போகிறார்கள்?.

உண்மையை ஆராயாமல் இந்த அவதூறு குற்றச்சாட்டுகளை ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும் சதிக்கு துணை நின்றவர்கள் தான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com