

சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சென்னை தலைமை செயலகத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது விண்ணப்ப படிவம் 17 சி மூலம் தான் அறிய முடியும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிற இந்த படிவத்தை கூட வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்ல கூடாது என்பது சரியாக இருக்காது என்று தேர்தல் அதிகாரியிடம் சொன்னோம். இதனால் அவர் 17 சி படிவத்துடன், பென்சிலையும் எடுத்து செல்ல அனுமதி வழங்கி இருக்கிறார்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளர்கள் எத்தனை வாக்குகள் பெற்றார்கள் என்ற விவரத்தை தருவதாக தேர்தல் அதிகாரி சொல்லி இருக்கிறார். விவிபாட் எந்திரங்களுக்கு தனி முகவர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு 30-க்கு 30 என்ற அறையில் தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 63 வேட்பாளர்கள், 800-க்கும் மேற்பட்ட முகவர்கள் இருக்கிறார்கள். எனவே இதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னோம். அதற்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.