

கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிகள், அந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளாக விளங்குகின்றன. ஆழியாறில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, வண்ண மீன் காட்சியகம் மற்றும் கவியருவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைக் காண தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலாவிற்கு வரும் பயணிகளுக்கு வனவிலங்குகள், பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதற்காக விழிப்புணர்வு சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆழியாறின் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பூங்காவில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு, கரடி, பாம்பு, புலி உள்ளிட்ட விலங்குகளின் சிற்பங்களையும் சுற்றுலா பயணிகல் கண்டு களித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று இருவாய்ச்சி பறவை குறித்து விளக்கம் அளித்தனர்.
இதே போன்று வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்துச் சென்று வனவிலங்குகள், பறவை இனங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.