அய்யா வைகுண்டர் அவதார திருநாள்: பக்தர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பக்தர்கள் அனைவரும் அய்யா குண்டரின் திருஆசியை பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டர் அவதார திருநாள்: பக்தர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கடற்கரை சந்தோசபுரத்துக்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது.

இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19- ந்தேதி இரவு அய்யாவழி மக்கள், அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி மாசி 20-ந்தேதி அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அவரது அவதார காட்சியை கண்டு அருள் பெறுவார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்ட மக்கள் சாமிதோப்பு தலைமைபதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அய்யா வைகுண்டர் அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்.

கடந்த ஜனவரி 22-ந்தேதி அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று அவரது அருளாசியை பெற்றேன். இந்தாண்டு அய்யா வைகுண்டர் 192ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெற உள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டரின் திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com