மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையினால் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகும் அரசு அதிகாரிகள் முறையாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் பருவமழை காலங்களில் பொதுமக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சென்னை நகர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய கீழ்மட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1913 என்ற ஹெல்ப் லைன் எண் செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இதைதொடர்ந்து கோர்ட்டு அறைக்குள் இருந்த அட்வகேட் ஜெனரல் தனது செல்போன் மூலம் ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த அலுவலர் பேசினார். இதைதொடர்ந்து கட்டுப்பாட்டு மையம் முறையாக செயல்படுவதாக அட்வகேட் ஜெனரல் கூறினார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என்பதை நாங்களும் அறிகிறோம். தேங்கிய மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதத்திற்குள் அகற்ற வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 10ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com