

சென்னை,
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
கவர்னருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது கவர்னர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் கவர்னரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசிதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் மேலும் கூறுகையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பு 3 அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. கவர்னரின் கான்வாய் சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசியெறிந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும் கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் கான்வாய் வாகனங்கள் மீது கற்கள், கொடிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.