

சென்னை,
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தலா ரூ.3 லட்சம் வீதம் லஞ்சம் வாங்கி தகுதியில்லாத நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, மாநில அரசு நிர்வாகத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. நேரடியாக விசாரிக்க முடியாது. இந்த புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு அரசு குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் நேற்று ஆஜராகி, அரசுக்கு இதுவரை அந்த புகார் மனு கிடைக்கவில்லை. எனவே அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என உத்தரவிட்டார்.