

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 55). தொழில் அதிபரான இவர், கம்பெனி நடத்தி வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (44) என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதையறிந்த பார்த்திபனின் குடும்பத்தார், அவரை கண்டித்தனர். கள்ளக்காதலை கைவிடவும், இதற்காக குறிப்பிட்ட தொகையை சாந்தியிடம் கொடுத்துவிட்டு அவரை விட்டு விலகி வருமாறும் அறிவுறுத்தினர். மேலும் இது தொடர்பாக சாந்தியை அழைத்து பார்த்திபனுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறினர்.
இதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் வைத்து சாந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாந்தியுடன் அவருடைய மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் வந்திருந்தனர்.
அப்போது கள்ளக்காதலை கைவிட சாந்திக்கு வீட்டுமனை கொடுப்பதாக பார்த்திபன் தரப்பினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த சாந்தி, ரூ.6 லட்சம் தந்தால் விலகுவதாக கூறினார். அதற்கு ரூ.2 லட்சம் தருவதாக பார்த்திபன் தரப்பினர் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சாந்தியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மகள் வெண்பதி மற்றும் மருமகன் ஆறுமுகம் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
உடனடியாக சாந்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்தில் லேசான காயம் அடைந்த சாந்தியின் மகள் மற்றும் மருமகன் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.