திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் லோக் அதாலத் மூலம் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 3,187 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் லோக் அதாலத் மூலம் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
Published on

லோக் அதாலத்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அளித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வ சுந்தரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ராதேவி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கணபதிசாமி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலாராஸ், வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலுவை வழக்குகள்

அதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதாவரம் தாலுகா நீதிமன்றங்களிலும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

சமரச தீர்வு

மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 811 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, அவற்றில் 3 ஆயிரத்து 187 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.30 கோடியே 63 லட்சத்து 76 ஆயிரத்து 710 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இறுதியில் பயனாளிகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி காசோலைகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com