முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு

முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு
Published on

பேச்சு போட்டிகள்

தமிழக அரசின் உத்தரவின்படி மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நேற்று முன்தினம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மான்விழி தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கு சுண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் துரைக்கண்ணுவும், அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ் பேராசிரியர் இளையராஜாவும் தலைமை தாங்கினார்.

இதில் காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடுவர்களாக ஆசிரியர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடுவர்களாக பேராசிரியர்களும் செயல்பட்டனர். போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 58 பேரும், கல்லூரி மாணவ-மாணவிகள் 11 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதலிடம் பிடித்தவர்கள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை கீழப்பழுவூர் அரசு சிறப்பு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் கமலேஷ்வரனும், 2-ம் இடத்தை தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி விஷ்ணுபிரியாவும், 3-ம் இடத்தை அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி அபிதாவும் பிடித்தனர். போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி லலிதாவும், நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சரண்யாவும் பிடித்தனர்.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வரதராஜன்பேட்டை அன்னை ஞானம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு மாணவி நந்தினியும், 2-ம் இடத்தை ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு மாணவி கனிமொழியும், 3-ம் இடத்தை அரியலூர் அரசு கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் கலைவாணனும் பிடித்தனர்.

பரிசுத்தொகை

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசுதொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. இதேபோல் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தனித்தனியாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com