தொடர் கனமழையால் முந்திரி விவசாயிகள் கவலை

தொடர் கனமழையால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தொடர் கனமழையால் முந்திரி விவசாயிகள் கவலை
Published on

உடையார்பாளையம்,

முந்திரி சாகுபடி

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் மற்றும் மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முந்திரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளையும் முந்திரி பருப்புக்கு வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தநிலையில் அரியலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முந்திரி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து முந்திரி விவசாயிகள் கூறியதாவது:-

மகசூல் பாதிப்பு

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி பருப்பு அரியலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிகளவு வெப்பம் இருந்தால் தான் முந்திரி நன்கு காய்த்து அதிக மகசூல் தரும். ஆனால் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் ஒரு வார காலமாக தொடர் கனமழையும், மே மாதத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக கன மழை பெய்ததால் முந்திரி பூ கருகி வீணாகியது.

வழக்கமாக முந்திரி ஏக்கர் ஒன்றுக்கு 2 மூட்டை முதல் 4 மூட்டை வரை கிடைக்கும். ஆனால் தொடர் கனமழையால் ஏக்கர் ஒன்றுக்கு 1 மூட்டை முதல் 2 மூட்டை வரைதான் மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், தொடர் மழையால் முந்திரி மரத்தில் இருந்து பறித்த கொட்டையை காயவைக்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். முந்திரி கொட்டையை சரி வர காயவைக்காததால் அதிகளவில் சொத்தை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com